கத்தார் நாட்டில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குவைத்தில் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது. படம் ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் குவைத் நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, கத்தாரிலும் படத்தை வெளியிட தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே மலையாளத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘குரூப்’ படத்திற்கும், தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.