2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை ஜோதிட மணி எம்.பஞ்சாட்சர சர்மா கணித்து வழங்கியுள்ளார்.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும் . எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மேலும் எவருக்கும் முடியாத விஷயங்களுக்கு வாக்கு கொடுக்க
வேண்டாம்.
மற்றபடி குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து கெளரவம் உயரும். உங்கள் தன்னம்பிக்கையும், தனித்தன்மையும் அதிகரிக்கும். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். பழைய கடன்களையும் வசூலிப்பீர்கள். விலகி இருந்த உறவினர்களும் நண்பர்களும் தேடி வருவார்கள். மனதிலும் நேர்மறை சிந்தனைகள் உண்டாகி தெளிவுடன் செயல்படுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த காலதாமதங்கள் நீங்கும் காலகட்டமிது.
ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகன்று சுமுகம் ஏற்படும். அந்தச் சொத்துக்களிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். உடல்நலமும் மனவளமும் நன்றாக இருக்கும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ கூடாது. செய்தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும், வழிமுறைகளையும் கொடுக்கும்.
மேலும் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியால் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். பயணங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால், உங்கள் கைப் பொருள்களை கவனத்துடன் திருட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தெய்வ வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் மனம் ஒருமித்து ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் காலகட்டமிது.
உத்யோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் ஏற்றம், இறக்கமாகக் காணப்படும். திருமணம் சற்று தள்ளிப்போனாலும் விரைவில் கைகூடும். வீண் செலவுகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளினால் சற்று மனம் சோர்ந்தாலும் உடன் பணிபுரியும் ஊழியர்களால் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
வியாபாரிகள் கூட்டுத் தொழிலைத் தவிர்த்திடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் தேவை.
விவசாயிகளுக்கு விளைபொருள்களை விற்பதில் சற்று நஷ்டம் உண்டாகலாம். எனினும் கடன் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது பதியும். புதுப்புது முயற்சிகளினால் பெருமை சேரும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் கிடைத்தாலும் கையொப்பமிட சற்று காலம் தள்ளிப்போகும். இருப்பினும் பழைய பாக்கிகள் கைக்கு வரும்.
பெண்மணிகள் உடன் பிறந்தவர்களுடன் இணக்கமாக இருங்கள். பெற்றோர் வழியில் பெருமைகளும், பிள்ளைகளினால் சந்தோஷமும் நிலைத்திடும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். தெய்வீகத்தில் சற்று நாட்டம் கூடும்.
மாணவமணிகள் பெற்றோரின் கோரிக்கைகளை மதித்து நிறைவேற்றுங்கள். மதிப்பெண்கள் எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்புக்கான முயற்சியில் தீவிர அக்கறை காட்டுவீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிறையும். மற்றவர்களைச் சரியாக எடைபோட்டு எச்சரிக்கையுடன் பழகுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
மழலை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளையும் சரியாகக் கையாளுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர் புகழ் உயரும். உயர்ந்தோரின் நட்பால் புதிய கெüரவமான பொறுப்புகளையும் பெறுவீர்கள். உங்கள் செயல்களைச் சரியாக முடிக்க நண்பர்கள் தேவையான உதவிகளையச் செய்வார்கள். சிலருக்கு பழைய வீட்டை விற்று விட்டு புதிய வீட்டை வாங்கும் யோகம் உண்காக் கூடிய கால கட்டமிது என்றால் மிகையாகாது.
இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர் புகழ் உயரத் தொடங்கும். சமுதாயத்தில் பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.
உங்களின் தன்னம்பிக்கை நாளுக்கு நாள் உயரும். பெற்றோருடன் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குழந்தைகளுக்கும் தக்க ஆலோசனை அறிவுரைகளை வழங்குவீர்கள். ஆன்மிகத்திலும், இறைபணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
புதிய நண்பர்களின் மூலம் செய்தொழிலில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசாங்கத்திலிருந்து சாதகமான செய்திகளும், சலுகைகளும் கிடைக்கும். கடினமாக உழைத்து ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்புகளில் வைப்பீர்கள். சிலருக்கு பங்கு வர்த்தகத்தின் மூலமும் லாபம் கிடைக்கும். பூர்விகச் சொத்துகளில் இருந்த மனக்கசப்புகள் அகன்று சுமுகமான பாகப்பிரிவினை ஏற்படும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.
உத்யோகஸ்தர்களுக்கு கடினமான உழைப்பு இன்னும் தொடரும். நீண்டகால எண்ணங்கள் ஈடேறும் காலம் இது. உழைப்பை மூலதனமாக்கி முன்னேறுவீர்கள். எதிரிகளின் பலம் அழியும். பயணங்களின்போது பாதுகாப்பு தேவை.
வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் அனுசரணையுடன் நடந்து கொண்டாலும் கடை ஊழியர்களின் உதவி கிட்டாது. சற்று கவனமாக நடந்து கொள்வது உசிதம். லாபம் பெருகினாலும் கடையை தற்போது விரிவுபடுத்தாதீர்கள்.
விவசாயிகளுக்கு குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். புதுப்புது உபகரணங்களை வாங்கி நவீன விவசாயம் மேற்கொள்வீர்கள். கால்நடைகளாலும் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் சில பிரச்னைகள் உருவாகும். எனினும் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும், புதிய பதவிகள் வந்தாலும் அது தற்காலிக பதவியாகவே இருக்கும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடும். பொருளாதார வளர்ச்சி சற்று சுமாராகவே இருக்கும்.
பெண்மணிகள் கணவரிடமும், கணவர் வீட்டாருடனும் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.
மாணவமணிகள் விளையாட்டுத் துறையில் முத்திரைப் பதிப்பீர்கள். உயர்கல்வி கற்க வெளிநாடு ஆயத்தமாவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் நற்பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்கள், உடன் பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
செய்தொழிலில் லாபம் கூடத் தொடங்கும். உங்கள் நன்னடத்தையால் அனைவரையும் கவருவீர்கள். உங்கள் செயல்பாடுகளின் மூலம் அனைவரின் ஆதரவுகளையும், குறிப்பாக புதியவர்களின் ஆதரவைப் பெற்று செயற்கறிய செயல்களைச் செய்வீர்கள். நண்பர்களின் வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் உங்கள் ரகசியங்களை முழுமையாக வெளிப்படுத்தாமல் காரியமாற்றும் கால கட்டமிது என்றால் மிகையாகாது.
இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகி மறையும். உடல்நலத்திலும் சிறிது பாதிப்புண்டாகும். அதனால் உணவு விஷயங்களில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவும். உடற்சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கடுமையாக உழைக்கத் தொடங்குவீர்கள்.
வருமானம் சீராக இருந்தாலும், பேராசைக்கு இடம் தராமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம்கண்டு ஒதுக்கிவிடுவீர்கள். அதோடு எவருக்கும் முன்யோசனை இல்லாமல் வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி புதிய கடன்கள் என்று எதுவும் ஏற்படாது. தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தடங்கல்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். அனுபவம் இல்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம். உங்களின் முயற்சிகளைச் செம்மைபடுத்தி சரியாகத் திட்டம்தீட்டி வெற்றியடைவீர்கள்.
மற்றபடி குடும்ப வளம் மேம்பாடடையும். செலவுகள் குறைந்து சேமிப்பு கூடத் தொடங்கும். மற்றபடி எவ்வளவுதான் கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல் காரியமாற்றும் கால கட்டமிது.
உத்யோகஸ்தர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் அனுசரணையும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் கொள்க. குறுக்கு வழியைத் தேடாமல் நேர்மையான வியாபாரம் செய்தீர்களேயானால், முன்னேற்றம் காணலாம். விவசாயிகள் இந்த வருடத்தில் பல புதுமைகளைக் கையாள்வீர்கள். மகசூல் பெருகும். தானியங்களை சந்தைகளில் விற்று அதிக லாபமீட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள் நலிந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற, தொண்டர்களுடன் கைகோர்த்து மேலிடத்திடம் முறை யிட்டு வெற்றி கிடைக்க வழிவகுப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றமான சூழலும், திருப்புமுனையும் உண்டாகும். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொண்டால் அனைத்தையும் வசமாக்குவீர்கள்.
பெண்மணிகள் கவனத்துடன் சுப காரியங்களை நடத்த வேண்டிவரும். இல்லையெனில் குழப்பத்துடன் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் கொள்க.
மாணவமணிகள் மிகுந்த கவனமுடன் பாடங்களைப் படிக்கவும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளை விடாமல் செய்து வரவும். உள்ளரங்கு விளையாட்டைத் தொடருங்கள்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். நண்பர்களையும், கூட்டாளிகளையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம் உயர்வாகவே தொடர்வதால் புதிய முதலீடுகளைச் செய்ய நினைப்பீர்கள்.
ரகசிய செயல்பாடுகளின் மூலமாகவும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். இதற்கேற்றவாறு திட்டங்களை மாற்றி செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதோடு புதிய அரிய வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.
அதிகாரப் பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்து காணப்படும். பெற்றோரின் ஆசிகளையும் அறிவுரை ஆலோசனைகளையும் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களைச் செய்ய நேரிடும். இதனால் உங்கள் மதிப்பு கெüரவம் அந்தஸ்து ஆகியவை பலமடங்கு பெருகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் நண்பர்கள், சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் தேடிவந்து உதவிகளைச் செய்வார்கள். உங்கள் தோற்றத்தில் மிடுக்கும் நடையில் கம்பீரமும் உண்டாகும். செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொள்வீர்கள். மேலும் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து ரிஸ்க் எடுத்துச் செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளைத் தேடித்தரும். ஆன்மிகத்திலும், ஆலய திருப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
உங்களின் தரும சிந்தனை மேலோங்கும். உங்களின் உழைப்பு வீண் போகாது. உடலில் இருந்த சோர்வும் ஆயாசமும் மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் முழுத் திறமையை வெளிக்கொணர்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும் கால கட்டமிது என்றால் மிகையாகாது.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசு காரியங்களை நிறைவேற்ற சற்று கூடுதல் முயற்சி தேவை. மேலதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். பிரயாணங்களின்போது சற்று விழிப்புணர்வு தேவை.
வியாபாரிகளுக்கு ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். அயல்நாட்டுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் லாபம் பெருகும். தொழிலுக்கான கடன் உதவியும் பெற்று விரிவாக்கம் செய்வீர்கள்.
விவசாயிகள் அரசு வகையில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். இருப்பினும் சிறுசிறு உடல் உபாதைகளையும் சந்திக்கலாம். கால்நடைகளால் நல்ல லாபமும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பணம் தொடர்பான விஷயத்தில் தொண்டர்களுடன் சிறிது மனக்கசப்புகள் உண்டாகலாம். இருப்பினும் அமைதியுடன் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். எவரிடமும் ரகசிய தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் கை ஓங்க எல்லாத் திறமையையும் பயன்படுத்துங்கள்.
கலைத்துறையினர் வரம்பில்லாத வெற்றியைப் பெறப் போகிறீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடத்தில் அன்பு, அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் மிகுந்தளவுக்கு நாட்டம் காண்பீர்கள். மாணவமணிகள் அச்சம், வெறுப்பு, பொறாமை போன்ற குணங்களை விட்டொழிக்கத் தயாராகுங்கள்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.
இதையும் படியுங்கள்- தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்