ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது.
58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.
கொல்லப்பட்ட அண்ணாமலை பழனி, 15 வருடங்களின் முன்னர் தனது மனைவி, பிள்ளைகளுடன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, ஆடைத் தொழிற்சாலையொன்றையும் நடத்தி வந்துள்ளார். அவ்வப்போது இலங்கை வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 6ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்த இவர் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, அவரது மனைவி இத்தாலியிலிருந்து திரும்பி வந்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். ஆனமடுவ வடுவத்தேவ குளத்துக்கு அருகில் கொள்வனவு செய்திருந்த காணியை பார்வையிட சென்ற வேளை காணாமல் போனதாக அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய இந்த வர்த்தகருடன் நெருங்கி பழகிய ஆனமடுவ மொன்னேகுளம், கோரலயகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் சந்தேகத்தில் ஆனமடுவ பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். எனினும், போதிய சாட்சியமின்மையால் ஆனமடுவ நீதிமன்றில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, வர்த்தகரின் மனைவி, சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்தார்.
அந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த 2ஆம் திகதி சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து உயிரிழந்த நபரின் ஏ.டி.எம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தகர் காணாமல் போய் 14 நாட்களுக்குள் குறித்த ஏ.டி.எம் அட்டையிலிருந்து 14 இலட்சம் ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.
விசாரணையில், கொலை தொடர்பான அனைத்து விடயங்களும் வெளிச்சத்திற்கு வந்தது.
வர்த்தகர் கொள்வனவு செய்த 8 மில்லியன் ரூபா பெறுமதியான காணியில், தென்னை பயிரிடுவதற்காக தனக்கு 3 மில்லியன் ரூபாவை அனுப்பியதாகவும் மேலும் பல சந்தர்ப்பங்களில் அதிக பணம் அனுப்பியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அனுப்பிய பணத்தில் தென்னை பயிரிட்டாலும், 2021 மே மாதம் தென்னந்தோப்பை யானைகள் நாசம் செய்ததாகவும், வர்த்தகர் காணியை பார்வையிட வந்து, தென்னைகளை காணவில்லையென தன்னிடம் தகராறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தென்னைக்கு பசளை புதைக்க வெட்டப்பட்ட குழியில், சடலத்தை பாயில் சுற்றி புதைத்தாக சந்தேகநபர் தெரிவித்தார்.