ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பிரதமர் பதவி உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு அஸ்கிரி, மல்வத்து, அமரபுர மற்றும் ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்படும் வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
நிர்வாகத்தின் நோக்கத்திற்காக இடைக்காலத்தில் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற நிபுணர் ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனைக் குழுவின் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தேசியக் கொள்கையின் அடிப்படையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட வேண்டிய ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைப் பின்பற்றுவதற்கு சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறை விசாரணை மற்றும் முறையான கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவ்வப்போது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் முன்னோடி என்ற வகையில், சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுவதற்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.