வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளுக்குள் சென்ற திருடர்கள் சமைலறை புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், பணம், தொலைபேசி, கமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரம£ரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கற்குழி பகுதியைச் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து திருடப்பட்ட தொலைபேசி, கைகடிகாரம், கமரா, உருக்கப்பட்ட நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நபர் போதைப் பொருள் விற்பனை செய்தமை மற்றும் 5 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.