திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை அழைத்துச் சென்று திருமணம் செய்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்யபட்டுள்ளார்.
கொட்டையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் மாயமானார். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவனின் தாயார் கடந்த 11ம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் எம்ஏ, பிஎட், எம்ஃபில் முடித்துவிட்டு மாணவன் படிக்கும் அதே பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த வையாபுரி திலகவதி தம்பதியரின் மகள் சர்மிளா (26) அதே தேதியில் மாயமானது தெரிந்தது. 6 ஆண்டுகளாக சர்மிளா இந்த பள்ளியில் வேலை செய்துள்ளார். மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு சர்மிளா பாடம் நடத்தியதாக தெரிகிறது.அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் ஆசிரியையும், மாணவனுக்கும் இடையே முறை தவறிய காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து துறையூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்று ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர், வேளாங்கண்ணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு திருச்சியில் தனது தோழி வீட்டில் மாணவனுடன் சர்மிளா தஞ்சம் அடைந்துள்ளார் . தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஆசிரியை சர்மிளாவை போக்சோவில் கைது செய்தனர். மாணவன் காப்பகத்தில் கொண்டு சென்று விடப்பட்டார்.