74 ஆண்டு கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கண்டன பேரணி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதும் அரசாங்கத்தை கவிழ்ப்பதுமே இந்த பேரணியின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பில் உணர்வற்ற முறையில் செயற்படுவதாகவும், தற்போதைய நிர்வாகம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு ஏற்றதல்ல என்பதை நிரூபித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணி தெல்கந்த சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன் நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்தார்.
கடந்த 74 ஆண்டுகளாக நாட்டை ஏழ்மை நிலைக்குத் தள்ளிய அரசாங்கத்தையும் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் தூக்கியெறிந்து புதிய மக்கள் மைய ஆட்சியின் தொடக்கத்தை இப்பேரணி குறிக்கும் என்றும் தெரிவித்தார்.




