நேபாளத்தில் இருந்து ஐஸ் போதைப் பொருளை, சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமை செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் விடுதியில் ஐஸ் போதைப்பொருள் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து தனியார் விடுதியில் பதுங்கி இருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர். மேலும் விடுதியில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ ஐஸ் மற்றும் 2 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரான விஜயகுமார் மற்றும் அழகுராஜா ஆகியோர், போதைபொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் என தெரிவித்தார்.