இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தன. 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
447 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இலங்கை அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 59.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக கப்டன் திமுத் கருணாரத்ன 174 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 107 ரன்களும், குஷல் மெண்டிஸ் 54 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4, பும்ரா 3, அக்சர் படேல் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணிஇன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 67 ரன்களும் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வானார். தொடர் நாயகனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். அவர், 2 டெஸ்டிலும் சேர்த்து 185 ரன்கள் எடுத்திருந்தார்.
இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினை (439 விக்கெட்கள்) பின்னுக்குதள்ளி அந்த இடத்தை கைப்பற்றினார்.
இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 442 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.