தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிபாரிசுக்கு அமைய டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
டீசல் விலை லீற்றருக்கு 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எம்.பி காரியவசம் என்ன நடவடிக்கை எடுப்பார் என கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் அரசாங்கம் நாளாந்தம் ரூபா 750 மில்லியன் வருமானம் ஈட்டுவதாக அவர் கூறினார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தாம் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டதன் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில அமைச்சர்கள் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்தார்.
மருந்து, எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
நிதியமைச்சர் வெளிநாட்டு கையிருப்புகளை தவறாக நிர்வகித்ததன் காரணமாக ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையே தற்போது நிலவும் அனைத்து தட்டுப்பாடுகளுக்கும் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் குறைபாடுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்ததால், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்கா செல்லும் வரை தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.