24.2 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இந்தியா

திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்

”மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட அவர், திமுக அரசு வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெப்ரவரி 22ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் டி.ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், நில அபகரிப்பு வழக்கில் திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்கிழமைதோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர் நீதிமன்றம் ஜாமீன் கடந்த 11ஆம் தேதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, மார்ச் 12ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட டி.ஜெயக்குமார் நேற்று இரவு திருச்சி வந்தடைந்தார்.

தொடர்ந்து, இன்று காலை திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ந.சேரன் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார். இவரது வருகைக்காக காவல் நிலையத்துக்கு வெளியே மேஜை, நாற்காலி அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி உட்பட அதிமுகவினர் புடைசூழ வந்த டி.ஜெயக்குமார், அங்கேயே கையெழுத்திட்டுவிட்டுப் புறப்பட்டார். டி.ஜெயக்குமார் வருகையின்போது அதிமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவல் துறையினரைக் கண்டித்தும், அதிமுக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார் ஆகியோரை வாழ்த்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

காவல் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் டி.ஜெயக்குமார் கூறுகையில், ”திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கில், குறிப்பாக அதிமுகவை அழித்து ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மக்கள் பணிகளில் கவனம் செலுத்தாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

திமுக அரசு வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் மாபெரும் எழுச்சி பெற்ற இயக்கம் அதிமுக. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றது. எனவே, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும். அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றும்.

மு.கருணாநிதி காலத்திலேயே அதிமுகவை அழிக்க கங்ஙனம்கட்டி செயல்பட்டும் முடியவில்லை. பல்வேறு அடக்குமுறைகளைத் தாண்டி பெரும் சாதனை புரிந்த இயக்கம் அதிமுக. எனவே, பொய் வழக்குகள் பதிவு செய்து அதிமுகவை அழித்துவிடலாம் என்று கருதினால், அது நிறைவேறாது.

அடக்குமுறையை ஏவி அதிமுகவை அழிக்க நினைத்தால் ஒருபோதும் நடக்காது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கம். சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி – தோல்வி ஆகியவற்றை வைத்து ஒரு கட்சியை எடைபோட முடியாது. அதிமுகவில் யார் கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த தேர்தல் வெற்றியை நோக்கி அதிமுக பயணம் செய்யும். கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

Leave a Comment