இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு (பலாலி) வருகை தரவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்தியத் தூதர் கோபால் பாக்லே ஆகியோர் அவரை வரவேற்கவுள்ளனர்.
BIMSTEC (பல்துறை, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, இப்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்குவதற்காக புதுடெல்லிக்குச் செல்கிறார்.
எரிபொருள் மற்றும் மருந்து இறக்குமதிக்காக இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இது ஒரு முன்னோடியாகும். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையானது பசில் ராஜபக்ச வெளியேறுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக மஹிந்த யாழ்ப்பாணம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் இலங்கை கடன்பெறுவதற்கான பல நிபந்தனைகளில், சர்வதேசநாணய நிதியத்தின் உதவியை பெறுவது, இந்தியா முதலீடு செய்ய விரும்பும் பல திட்டங்களுக்கு அனுமதிப்பது போன்றன அடங்குமென தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், பாதுகாப்பு தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் பரிசீலனையில் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று வர்ணிக்கப்படுபவருமான கவுதம் அதானி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வந்திருந்தார். தனது தனி ஜெட் விமானத்தில் கொழும்பு வந்தார். அவர் பல திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளார்.