அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் புதிய தவணைக்காக இன்று திறக்கப்படும்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கு வசதியாக பாடசாலைகள் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டிருந்தன.
கல்வி அமைச்சின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட புதிய சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், புதிய பாடசாலை தவணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அத்தகைய வகுப்புகள் ஒவ்வொரு நாளும் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஆனால், ஒரு வகுப்பில் 21 முதல் 49 மாணவர்கள் இருந்தால், அத்தகைய வகுப்புகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு வாரத்திற்கு ஒருமுறை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
40 மாணவர்களுக்கு மேல் இருந்தால், மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
பாடசாலைக்கு வரவழைக்கப்படாத மாணவர்களின் குழுக்களுக்கு மாற்றுக் கற்றல் முறைகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பாடங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்விச் செயலாளர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓய்வு அளிக்க நேரம் ஒதுக்குதல், வகுப்புக்கு ஒரு மாணவன் வீதம் முழு வகுப்பினருக்கும் ஓர்டர் செய்வதற்கும், சரியான நேரத்தில் உணவு தயாரித்து, அந்தந்த வகுப்புகளுக்கு வழங்குவதற்கும், தொடர்ந்து பராமரிப்பதற்கும், சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. செயல்பாட்டின் போது சமூக விலகல் வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.