ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொருவரை நியமிக்க வேண்டும். பிரதமரது நடவடிக்கை எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக நாடுகளில் ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எல்லா இனங்களையும் சமமாக கருத்தப்பட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். தட்டிக் கழிக்க முடியாது. இலங்கை அரசு தட்டிக் கழித்து வருவதால் தான் ஐ.நா முக்கியமான தீர்மானத்தை சொல்லியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் நாங்கள் எல்லோரும் சோந்து ஐ.நா முன் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டி வரும்.
மேலும், யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் கண்காணிப்பை மேற்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எல்லா மாவட்டங்களிலும் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் செய்யப்படுகின்ற வேலைகள் ஒழுங்காக நடைபெறும். ஆகையால் பிரதமரது நடவடிக்கை எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.