அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, மக்கள் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தமது கட்சி தயாராக உள்ளது என்றார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் பொது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தேவையான வேலைத்திட்டங்களை வெளிப்படுத்தும் நிகழ்வொன்றை நடத்தியதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு நிகழ்வு இரண்டு அமைச்சர்களை நீக்குவதற்கு வழிவகுத்தது ஏமாற்றம் மற்றும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
நிகழ்வில் பேசப்பட்ட விடயங்களிற்கு பகுத்தறிவற்ற முறையில் செயற்படுவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் தவறுகளைத் திருத்துவதற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டிப்பதாகவும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகள் கொண்ட குழுவிற்கு தலைமைத்துவத்தை வழங்கி புதிய பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் தெரிவித்தார்.