எமது நாட்டின் அரசியலமைப்பில் ஒழுங்கான முறையில் எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாத வகையில் உச்சநீதிமன்றம் (நீதித்துறை) எம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் சுதந்திர நாட்டின் உண்மையான அடையாளம். அதனை அனுபவிக்கும் பிரஜைகளாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது தனிமனித வாழ்வில் உள்ள மிகப்பெரிய அந்தஸ்தாகும். எமது நாட்டில் கல்விக்கொள்கை, சுகாதாரக்கொள்கை போன்றன சிறந்த விடயங்களாக அமைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி பொருளாதார கொள்கையில் விருத்தி ஏற்பட்டால் ஒவ்வொரு வீட்டிலும் சந்தோசம் நிலவும் அதற்காக சகலரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது நாட்டு மக்களின் நன்மை கருதி பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனில்லாமல், சொந்தக்காலில் நிற்கும் எதிர்கால சந்ததியை பற்றி சிந்தித்து எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா சூழ்நிலை காரணமாக எமது நாட்டின் பொருளாதாரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்க முடியாது. எம்மைவிட பின்தங்கிய நிலையில் இருந்த சில நாடுகளை 10 வருட இடைவெளியில் தன்னிறைவு கொண்ட உற்பத்திகளினால் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளனர். தன்னிறைவு கொண்ட உற்பத்திகளினால் எமது நாட்டு மக்களும் அந்த நிலையை அடைவார்கள் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எமது நாட்டின் சுதந்திரத்தை பெற போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் தியாக வீரர்களின் போராட்டம் கனதியானது. சுதந்திரமானது தனிமனித அந்தஸ்தாகவும், கௌரவமாகவும் இருந்தாலும் சுதந்திரத்தின் பெறுமானம் என்பது பொருளாதார அபிவிருத்தியையும், அடைகின்ற பொழுதுதான் உண்மையான சுதந்திர சுவாச காற்றை நான் சுவாசிக்க முடியும் என்பது நவீன அரசியல் கொள்கையாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் பொருளாதாரத்திற்காக கையேந்தாமல் தன்னுடைய பொருளாதாரத்தை தானே பராமரிக்க கூடிய நாடக எப்போது மாறுகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாக கொள்ளமுடியும்.
இன்னுமொரு நாட்டிடம் பொருளாதாரத்திற்காக தங்கியிராது எமது நாட்டின் தலைவர்கள் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவும், ஏற்றுமதிகளையும் அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டில் ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் கௌரவம் வளர்ந்த பல நாடுகளில் வாழும் படித்தவர்கள், வர்த்தகர்கள், கோடீஸ்வர்களுக்கும் இல்லை. நிறைய கெடுபிடிகள் இருக்கிறது. இதனை வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளிடம் கேட்டல் அது பற்றி கூறுவார்கள் என்று தெரிவித்தார்.