திருகோணமலையில் தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளரிடமிருந்து 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம் மற்றும் காசோலைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசிப் பணத்தில் ஏசியில் ரூம் போட்டு உல்லாசமாக இருக்க நினைத்து, இப்போது கம்பி எண்ணும் இளைஞர்கள் பற்றிய செய்தித் தொகுப்பு இது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டிகளி வரோதயநகர் பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் வலைவீசி தேடப்பட்டு வருகிறார்.
திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் உள்ள தனியார் விநியோக நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றும் ஒருவர், முதல்நாள் வரவுப் பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக சென்றிருந்தார். வங்கியில் வைப்பிலிட வேண்டிய பணம் மற்றும் காசோலைகளை தனது ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளின் டிக்கிக்குள் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
வங்கிக்கு செல்வதற்கு முன்னதாக, தனது தம்பியின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்றவர், ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தார்.
அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மோட்டார் சைக்கிளின் பின் டிக்கி உடைக்கப்பட்டு, வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டிய 22 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் 19 இலட்சம் ரூபா பெறுமதியான 43 காசோலைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
அந்த நபர், பணம் திருடப்பட்டது தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
சம்பவ இடத்திலிருந்த சிசிரிவி கமரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்த போது, 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணம் திருடுவது தெரிய வந்தது.
அந்த நபர்களை அடையாளம் கண்ட பொலிசார், அவர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களின் அடிப்படையில் தேடுதல் நடத்தினர்.
தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் கொழும்பு பகுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. எனினும், பொலிசாருக்கு டிமிக்கி கொடுப்பதற்காக அவர்கள் தினமும் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள சொகுசு விடுதிகளில் மாறி மாறி தங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் திகதி இரவு, புறக்கோட்டையிலுள்ள விடுதியில் தங்கியிருந்த இளைஞர்களை பொலிசார் சுற்றிவளைத்தனர். இதன்போது இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
கைதானவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட பணமும், காசோலையும் நிலாவெளிப் பகுதியில் உள்ள கொள்ளையர்களில் ஒருவரின் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
நிலாவெளியிலுள்ள வீட்டை பொலிசார் சோதனையிட்ட போது, மலசலகூடத்தின் மேல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ரொக்கப் பணமும், 19 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான மதிப்புடைய 43 காசோலைகளும் கைப்பற்றப்பட்டன.
வீட்டின் உரிமையாளரான 65 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர், பணத்தை பறிகொடுத்த தனியார் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றியவர். முதல்நாள் பண வரவுகளை, வங்கியில் வைப்பிலிட மறுநாள் காலையில் முகாமையாளர் தினமும் கொண்டு செல்வதை அறிந்திருந்தார். இதனடிப்படையிலேயே திருட்டுக்கு திட்டமிட்டதாக கைதான கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
23, 24 வயதான 3 இளைஞர்களே இந்த திருட்டில் ஈடுபட்டனர்.
கைதான இருவரும் திருகோணமலை சிவன் கோயில் மற்றும் ஆனந்தபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். போதைக்கும் அடிமையானவர்கள். கொழும்பிற்கு சென்று போதைப்பொருள் உட்கொண்டு, ரூம் போட்டு, ‘பன்’ ஆக இருக்க விரும்பியே பணத்தை கொள்ளையிட்டோம் என அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கைதான 3 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
65 வயதான பெண்ணை பிணையில் விடுவிக்குமாறும், இளைஞர்கள் இருவரைம் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.