சிறுநீரக நோயில் இருந்து பாதுகாக்கும் முகமாக வவுனியாவில் 100 பேருக்கு நீர் வடிகட்டும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கிராமிய, பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா ஆகியோரின் சிறுநீரக நோயாளர்களுக்கான நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு நீர் வடிகட்டும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இவ் இயந்திரத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் வழங்கி வைத்தார்.
சிறுநீரக நோய் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் என்பவற்ரற அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மண்ணினால் செய்யப்பட்ட நீர் வடிகட்டி இயந்திரத்தை பயன்படுத்தும் முறை தொடர்பிலும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகளால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.