அட்டன் – குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும் நிலையில் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கும் 8 மற்றும் 7 வயது சிறுமிகளாவர். அதேபோல் ஆண் பிள்ளைக்கு 6 வயது ஆகும்.
6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் அக்காவான 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.
அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகள் அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் அயலவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
மது போதையில் இருந்த குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பலமுறை தாக்கியதாகவும், தனது மனைவியைத் தாக்கியதில் அவரின் கையை முறிந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
–க.கிஷாந்தன்-