ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்கிறது.
இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
கப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலக, கே.எல்.ராகுல் கப்டன் பொறுப்பேற்றார். அதன்படி ரொஸ் வென்ற ராகுல் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ராகுல் – அகர்வால் இணை ஓரளவு விளையாடியது. மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி ஆட்டம் கண்டது.
கடந்த போட்டியை போல புஜாரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். புஜாரா மூன்று ரன்களுக்கு அவுட் ஆக, அவரை தொடர்ந்து வந்த ரஹானே டக் அவுட் ஆனார். விராட் கோலிக்குப் பதிலாக களமிறங்கிய ஹனுமா விஹாரி தன்னை நிரூபிக்கத் தவறினார். 20 ரன்களில் ஹனுமா விஹாரி நடையை கட்டினார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்துகொண்டிருக்க முதல்முறையாக டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்ற தனது ஃபோர்மை தொடர்ந்தார். 133 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் அவரும் வெளியேற, இந்திய அணி கௌரவமான ஸ்கோர் எட்ட உதவினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களை அதிரடியாக எடுத்து அஸ்வின் அவுட் ஆனார். டெயிலெண்டர்கள் யாரும் அவருக்கு கைகொடுக்க தவற, இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா தரப்பில் இளம் வீரர் மார்கோ ஜென்ஸன் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.