பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன் என்று முருகன் பக்தர் மு.வேலாயுதம் தெரிவித்தார்.
எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனர்.3 பேருக்கும் திருமணமும் ஆகி விட்டது.ஆனால் 3 பிள்ளைகளும் மதம் மாறியதால் வருத்தமடைந்து எனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன்.
இச்சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். நானும் என் மனைவியும் தற்போது அந்த சொத்தில் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறோம். மீதப்பகுதியை அதாவது 2 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளோம்.
3 பிள்ளைகளும் என் சொல் பேச்சு கேட்கவே இல்லை. பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்க வேண்டும். இந்தச் சொத்து நான் காஞ்சிபுரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய போது சுயமாக சம்பாதித்த சொத்தாகும். இந்தச் சொத்தினை தானமாக செய்யும் முழு உரிமையும் எனக்கு உள்ளது.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள மண்டபத்தில் எனது சொத்தை முருகனுக்கு காணிக்கையாக கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் மு.வேலாயுதம் தெரிவித்தார்.