மட்டக்களப்பு மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்தவித மதவாத இனவாத நோக்கமில்லாமில்லாமல் இதயசுத்தியுடன் கடமையாற்றிவரும் நிலையில் அவர்களை அரச பயங்கரவாதம் என்ற கீழ்தரமான கருத்துகளை தெரிவித்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
இதன்கீழ் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 59குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்குவதற்கு 18இலட்சம் ரூபாவும் 12குடும்பங்களுக்கான வீடுகள் திருத்துவதற்காக 26இலட்சம் ரூபாவும் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைப்பதற்காக 15இலட்சம் ரூபாவும் 18குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 12இலட்சத்து 60ஆயிரம் ரூபாவும் மிகவும் வறிய நிலையில் உள்ள 18 குடும்பங்கள் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்காக 04இலட்சத்து 16ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நிதிகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேசன்,அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.