அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், இதனால் அங்குள்ள 22,000 நோயாளிகள், ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது மத்திய அரசின் வேறு துறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் செய்தி நிறுவனமான ஏஎப்பி குஜராத்தில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அங்குள்ள தங்குமிடங்களில் உள்ள சிறுமிகளை சிலுவை அணிந்து பைபிளைப் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது.