நள்ளிரவு முதல் பொதிச் சேவைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதற்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
புகையிரத திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பயணச்சீட்டு வழங்குவதையும் தவிர்ப்போம் என ஒன்றியத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
குறுகிய அறிவிப்பில் புகையிரதங்கள் ரத்து செய்யப்படுவதால், போக்குவரத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் பொதிகள் பல நாட்கள் நிலையங்களில் இருப்பதோடு சில பொருட்களும் சேதமடைவதாக கசுன் சாமர கூறினார்.
தபால் மற்றும் பொதி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரவு அஞ்சல் புகையிரதங்கள், நீண்ட தூர விரைவு புகையிரதங்கள் இயக்கத்தில் ஈடுபடவில்லை என்றார்.
இதனால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக ஒன்றியத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஜனாதிபதியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமது தொழிற்சங்க நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்கு புகையிரத திணைக்களத்தின் நிர்வாகமே முழுப் பொறுப்பு எனவும் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.