மடகாஸ்கரில் மீட்புப் பணிகளின்போது ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் தப்பிய அமைச்சர் 12 மணி நேரம் நீந்திப் பிழைத்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
செர்ஜ் கெல்லெ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
“மரணத்துக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்று அவர் வேடிக்கையாகச் சொன்னார்.
அவருடன் பயணம் செய்த இரு பாதுகாப்பு அதிகாரிகளும் பிழைத்தனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் பயணப் படகு ஒன்று சில நாள்களுக்குமுன் மூழ்கியது. அதில் 39 பேர் உயிரிழந்தனர். அதைப் பார்வையிட அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றிருந்தார்.
இதன்போது விபத்து நேர்ந்தது.
57 வயது கெல்லே இரவு ஏழரை மணியிலிருந்து காலை ஏழரை மணிவரை நீந்திக் கரைசேர்ந்தார்.
உடல் குளிரில் நடுங்கக் கரைசேர்ந்த அவர் தாம் உயிருடன் இருப்பதை உடனடியாகத் தமது குடும்பத்தாருக்கும் உடன் பணியாற்றுவோருக்கும் தெரிவிக்கும்படி கிராமவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.
அவர் ஹெலிகொப்டரின் இருக்கையையே மிதவையாகப் பயன்படுத்தியதாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விளையாட்டுகளில் துடிப்பாக ஈடுபட்டுவந்ததால் அவர் 30 வயது மதிக்கத்தக்கவர் போல் வலுவான உடல்வாகையும், உறுதியையும் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.