25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இந்தியா

எதிர்ப்பு எதிரொலி: பெண்ணின் திருமண வயது குறித்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்ட திருத்த மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும்

குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, 18 வயது நிரம்பியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாளாக அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்று தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தேர்தல் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு, “ஒருவர் தகுந்த காரணங்களால் ஆதார் எண்ணை கொடுக்க முடியாவிட்டாலும் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மறுக்க முடியாது” என அரசுத் தரப்பில் விளக் கம் அளிக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தாங்கள் பங்கேற்காத நிலையில், இந்த மசோதாவுக்கு எவ்வாறு நேரம் ஒதுக்கலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த மசோதாவை விவாதித்து, நிறைவேற்ற அலுவல் ஆலோசனைக் குழு 3 மணி நேரம் ஒதுக்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவை அலுவலை நாள் முழுவதும் ஒத்திவைத்துவிட்டு லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என விதி எண் 267-ன் கீழ் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னதாக நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அலுவல் எதுவுமின்றி பிற்பகல் வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வெளிநடப்புக்கு மத்தியில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பெண்ணின் திருமண வயது

இதனிடையே பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

தற்போதைய சட்டவிதிகளின்படி பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இந்தச் சூழலில் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய ஜெயா ஜேட்லி தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பெண்களுக்கான திருமண வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவை பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் திருமண வயதில் பாலின சமத்துவம் இல்லாமல் இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா மூலம் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் பாலின சமத்துவம் உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, “மசோதாவின் நகல் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படவில்லை. அவசரகதியில் பணியாற்றும்போது தவறுகள் ஏற்படும். புதிய மசோதா குறித்து யாருடனும் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறியவில்லை. இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத் தினார்.

திமுக எம்.பி. கனிமொழி பேசும் போது, “யாரையும் கலந்தாலோசிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இது மிகவும் முக்கியமான மசோதா. இந்த மசோதாவை நிலைக் குழு அல்லது தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதன்பிறகே மசோதாவை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறும்போது, “எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் மசோ தாவை வரையறுத்து, நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயகவிரோத அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப அமைச்சர் ஸ்மிருதி இரானி அவைத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதன்படி மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான்; 7 விசாரணைக் குழுக்கள் அமைப்பு

Pagetamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

Leave a Comment