ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பான சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிடாமை மற்றும் ஜனவரி மாதத்திற்குள் உரிய சம்பளத்தை வழங்கத் தவறினால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 120 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ரூ.30 பில்லியன் அங்கீகரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்குள் இதனை நடைமுறைப்படுத்துமாறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடப்படும் சம்பளம் வழங்குவதற்கு உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்.
கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
சம்பளத்தை வழங்குவதற்கு, வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை போதுமானதாக இல்லை எனவும், அதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 5ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும். இந்தச் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கல்விச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும், ஜனவரி 20ஆம் திகதிக்குள் சம்பளத்தை வழங்கத் தவறினால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.