புதிய காதலனுடன் ஓடிச்சென்ற சிறுமி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பழைய காதலனிற்கு வட்ஸ்அப்பில் அனுப்பி, ‘நாங்கள் போகிறோம்’ என்ற தகவலையும் அனுப்பியுள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், அந்த ஜோடிய பொலிசார் சுலபமாக மடக்கிப் பிடித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி, ஒரு வார விடுமுறைக்காக தினியாவல பிரதேசத்தில் உள்ள தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்த போது விபரீத காதல் உருவானது.
அங்கு பொருட்களை ஏற்றி வந்த 20 வயதுடைய இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. உடனே தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளனர்.
விடுமுறையின் பின்னர் ஹோமாகம திரும்பிய பின்னரும் அவர்களிற்குள் தொலைபேசி காதல் மலர்ந்தது.
இருவரும் தனிக்குடித்தனம் செல்லலாமென இளைஞன் வழங்கிய ஆலோசனையை அடுத்து, சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமராக்களை பொலிசார் ஆய்வு செய்தனர்.
இதில், காதல் ஜோடி முச்சக்கர வண்டியொன்றிலும், சொகுசு பேருந்திலும் பயணம் செய்வது தெரிய வந்தது. முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டு சாரதியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் மற்றொரு தகவலையும் பொலிசாரிடம் தெரிவித்திருந்தனர்.
சிறுமிக்கு முன்னர் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், இதை அறிந்ததும், கண்டித்ததாகவும் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த இளைஞனிடம் சென்று பொலிசார் விசாரணை நடத்தினர்.
பொலிசார் சென்ற போது, அந்த இளைஞன் தேவதாஸ் ரேஞ்சில் சோகமாக காணப்பட்டுள்ளார். பொலிசார் விசாரித்த போதுதான், அவரது முன்னாள் காதலி வேறொருவருடன் ஓடி விட்டார் என்பதே சோகத்தின் காரணமென்பது தெரிய வந்தது.
முன்னாள் காதலியான அந்த சிறுமி, புதிய காதலனுடன் செல்லும் போது, முன்னாள் காதலனை கடுப்பேற்றி விட்டே சென்றிருக்கிறார்.
புதிய காதலனுடன் செல்பி படமொன்றை எடுத்து, அதை பழைய காதலனிற்கு அனுப்பி, ‘நாங்கள் போகிறோம்’ என்ற குறுந்தகவலையும் அனுப்பியுள்ளார்.
சிறுமியின் புதிய காதலன் தினியாவல பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஹதுடுவ பொலிசார் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த போது, காதல் ஜோடி சிக்கியது. 20 வயது காதலனும், அவரது தாயாருக்கு கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி தனது வயதை 17 என கூறியதாலேயே, நம்பி காதலித்தேன் என இளைஞன் தெரிவித்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.