கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து பட்டச் சான்றிதழை சில மாணவர்கள் ஏற்க மறுத்த நடவடிக்கை சரியானது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி விடுத்த அறிக்கையின் காரணமாக மாணவர்கள் கோபமடைந்திருந்ததாக, கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் பதவி என்பது பொதுவாக அரசியல் நியமனம். எவ்வாறாயினும், தேர்தலின் போது தமக்கு ஆதரவான நபர்களை நியமித்தது தவறா என ஜனாதிபதி அறிக்கையொன்றை விடுத்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிக்கை மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜாகொட, சான்றிதழ்களைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.
அரசாங்கம் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அந்தப் பதவிக்கு நியமித்திருக்கக் கூடாது, அதே சமயம் மரியாதைக்குரியவர்களும் அந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு அரசியல் குழுவினால் தூண்டப்படவில்லை என்றும், மாணவர்கள் தன்னெழுச்சியாகவே நியமனத்தை எதிர்க்கின்றனர் என்றும் கூறினார்.