மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக (தனி) உதவியாளராக 50 ஆண்டு காலமாக பணியாற்றிய சண்முகநாதன் (80) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கருணாநிதியின் ’நிழல்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக வயதுமூப்பு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. அதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று சண்முகநாதன் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முதலானோரால் கருதப்பட்டு வந்தவர். முதன்முதலில் அவர் தமிழகக் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்து நிருபராக பணியாற்றி வந்த சண்முகநாதன், பின்னர் கருணாநிதியின் அன்பு அழைப்பை ஏற்று 1969ஆம் ஆண்டு முதல் 2018 வரை 50 ஆண்டு காலமாக கருணாநிதியின் அதிகாரபூர்வ நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
67களில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக கருணாதி செல்லும் கூட்டங்களில் அவரது பேச்சை எழுதுவதற்காக காவல்துறை சார்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அதில் சண்முகநாதனின் பணிகளை கூர்ந்து கவனித்து வந்த கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சண்முகநாதனையே தனக்கான தனி உதவியாளராக அழைத்துக்கொண்டார்.
அதன்பிறகு கருணாநிதியின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணம் செய்தார் சண்முகநாதன். அவருடைய பணி எத்தகையதென்றால் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் எதிர்ககட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை கொண்டு செல்லும் பணி சண்முகநாதனுக்கு இருந்தது.
1967 இல் முதல்முறையாக திமுக, அன்றைய திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றபோது அவருக்கு தனி உதவியாளராக சேர்ந்தார் சண்முகநாதன். இதுதவிர கருணாநிதி பல்வேறு எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அத்தகைய காலங்களில் குறிப்பாக தனது கடைசி பத்தாண்டுகளில் நேரடியாக உடல்நிலை காரணமாக நேரடியாக எழுத இயலாத நிலை ஏற்பட்டபோது கருணாநிதியின் கருத்துகளை எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்தார். முரசொலிக்கு எழுதப்பட்ட கடிதங்கள், மற்ற நேர்காணல்கள் என அவர் எழுதுவதை முழுமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.
அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு காலகட்டங்களில் வரும் தேசிய தலைவர்கள் வீட்டுக்கு வந்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதும் சண்முகநாதன்தான் கருணாநிதியுடன் இருப்பார். கருணாநிதியின் அனைத்து அரசு, அரசியல் நிகழ்வுகளிலும் உடனிருந்தார் என்றவகையில் சண்முகநாதன் அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்றே அழைக்கப்பட்டார்.
நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது கருணாநிதியின் உதவியாளர் என்ற ஒரே காரணத்திற்காக போலீஸாரின் தொந்தரவுக்கும் ஆளானதை மறக்கமுடியாது என்பதை ஒரு பேட்டியில் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
”அதேசமயம், மத்தவங்களோட ஒப்பிடும்போது எனக்குக் குடைச்சல் கம்மின்னு சொல்லணும். தலைவருக்கு உதவியா இருந்த பலரைப் பிடிச்சுட்டுப் போய் அடிஅடின்னு அடிச்சுத் துவைச்சாங்க. கட்சிக்காரங்க பலரைச் சிறையில வெச்சு வதைச்சாங்க. போலீஸ் அடி உதையிலேயே சிட்டிபாபு செத்துப்போனார். தலைவர் கூட இருந்த பலர் அப்போ பயந்துக்கிட்டு வேலையை விட்டு ஓடிட்டாங்க. அப்போதான் அவருகூட இன்னும் உறுதுணையா இருக்கணும்னு எனக்குத் தோணுச்சு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல கருணாநிதியிடம் ஓரிருமுறை கோபித்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுவிட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால், அதெல்லாம் யாராவது சிலரால் இவரைப் பற்றி தவறாக அவரிடம் தெரிவித்ததாகவே இருக்கும். அத்தகைய சூழல்களில் எதிர்பாராத விதமாக ஆள்அனுப்பி மீண்டும் தனது உதவியாளராக அழைத்துக் கொண்டுவிடுவார். ”உண்மையில் அவரைவிட்டு என்னாலும் பிரிந்திருக்கமுடியவில்லை” என்று சண்முகநாதன் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.