அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக ஐந்து மாவட்டங்களில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மேற்படி விடயங்களுக்கு மேலதிகமாக கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு பின்வரும் விடயங்களை அவதானித்துள்ளது.
1. சட்டப்பூர்வமான மருத்துவ இடமாற்ற சபையின் அனுமதியின்றி விஷேட மருத்துவ நிபுணர்களின் இடமாற்ற பட்டியலைத் வெளியிடுதல்
2. முறையான மருத்துவ இடமாற்ற சபையின் அனுமதியின்றி உள்ளக பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குதல்
3. 2022 ஆண்டுக்குரிய தர மருத்துவர்களின் இடமாற்ற பட்டியலை வெளியிடுவதில் அமுலாக்கல் திகதியை பின்பற்றாமை
4.முறையான நடைமுறையின்றி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தவினால் மருத்துவ நிருவாக தரத்தில் மேற்கொள்ளப்பட்ட பிழையான விடயங்களை திருத்துவதற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நடைமுறைப்படுத்த தவறியமை.
5. இலங்கை மருத்துவ சபையின் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை
6. தேசிய சம்பளக்கொள்கை மீறல்
7. சுகாதார அமைச்சர் திரு. கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள் சுகாதார அமைச்சினுள் பணியாற்றும் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களுக்கிடையில் சம்பளக் கொள்கை மீறல் பிரச்சினைகளை உருவாக்க சுகாதார அமைச்சின் கடிதத்தலைப்பைப் பயன்படுத்துகிறார்.
இது சம்பந்தமாக அவசரமாக இன்று கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு, நீண்ட கலந்துரையாடலின் பின்னர் நாடளாவிய ரீதியில் இன்று (21) காலை 8.00 மணி முதல் மருத்துவ பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் அவசர சிகிச்சைகளை எவ்வித தடையுமின்றி அந்தந்த வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் வழங்குவார்கள்.
இதற்கு மேலதிகமாக,சேவைகளின் தனித்தன்மை காரணமாக, மகப்பேறு மருத்துவமனைகள், குழந்தைநல மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் பிரிவுகளில் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் செயல்படுத்தப்பட மாட்டாது.,
மேலும் கோவிட் சிகிச்சை சேவைகள் மற்றும் கோவிட் தடுப்பூசி வழங்கள் நடவடிக்கைகள் என்பன எவ்வித தடையுமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.