செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போன கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடுமேடு பகுதியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் இடத்தில் கடந்த 18ஆம் தேதி மனித பல், ரத்தகறை இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் அங்கு விசாரணை நடத்திய போது அடையாளம் தெரியாத ஆண் சடலம் மண்ணில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக அளித்த புகாரில் பிரேம்குமார் என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் என்பது அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரேம்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட 17ஆம் தேதி அவருடன் வந்த பிரவீனிடம் நடத்திய விசாரணையில் 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த இரண்டு மாணவிகளிடம் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவிச்சந்திரன் – செல்வி தம்பதியரின் மகன் பிரேம்குமார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை பிரேம்குமார் காதலித்து அவர்களை அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான செங்குன்றத்தை சேர்ந்த அசோக் என்பவரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் செல்போனை அவரிடம் இருந்து பறித்து விடலாம் என அசோக் இன்ஸ்டா தோழியிடம் ஆலோசனை கூறியுள்ளார். இன்ஸ்டா தோழன் அளித்த ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவிகள் பிரேம்குமாரை செங்குன்றத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி பிரேம்குமார் தமது நண்பன் ப்ரவீனுடன் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் வந்துள்ளார்.
அப்போது தமது கூட்டாளிகளுடன் அங்கிருந்த அசோக் பிரேம்குமாரை தாக்கி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து கொண்டு ஆந்திரா நோக்கி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் இருவரும் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டதாக போலீசிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.
தங்களது அந்தரங்க புகைப்படம் அடங்கிய செல்போனை பிரேம்குமாரிடம் இருந்து பறித்துவிடலாம் என திட்டம் தீட்டி அவரை செங்குன்றம் வரவழைத்ததாகவும் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவிகள் ஆரம்பாக்கம் போலீசில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என மாணவிகளை போலீசார் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கல்லூரி மாணவன் பிரேம்குமாரை இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்து சென்ற இன்ஸ்டா தோழன் அசோக் மற்றும் அவரது கூட்டாளிகளை ஆரம்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவிகளின் இன்ஸ்டா தோழன் அசோக் கைது செய்யப்பட்ட பிறகே கல்லூரி மாணவன் பிரேம்குமாரை கொலை செய்தது யார், யாரெல்லாம் கூட்டு சேர்ந்து கொலையில் ஈடுபட்டனர், எங்கு வைத்து எப்படி கொலை செய்தனர் என்பதெல்லாம் தெரிய வரும் என ஆரம்பாக்கம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.