பிலிப்பைன்ஸை தாக்கிய வலுவான Rai சூறாவளி காரணமாக, நாடு முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது. குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சூப்பர் சூறாவளியான ராய், மத்திய கிழக்கு கடற்கரை மற்றும் சியார்காவ் தீவு பகுதிகளில் வியாழக்கிழமை கரையைக் கடந்தது. இது ஆரம்பத்தில் மணிக்கு 260 கிலோமீட்டர் (160 மைல்) வேகத்தில் காற்று வீசியது. இது வகை 5 புயலுக்கு சமம்.
ராய் சூறாவளி பிலிப்பைன்ஸ் முழுவதும் மேற்கு நோக்கி பயணித்தபோது, வீடுகளின் கூரைகளை பெயர்த்து, மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சரித்து வீழ்த்தியது.
மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு செயலிழந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை வரை 208 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 52 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 239 பேர் “கணிசமான காயங்களுக்கு” உள்ளாகியுள்ளனர் என்று பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய விசாயாஸ் பிராந்தியத்தில் உள்ள போஹோல் மாகாணத்தில் சுமார் 75% வீடுகள் சேதமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் உதவிச் செயலாளர் கேசியானோ மோனிலா திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். குறைந்தது 227 நகரங்கள் மற்றும் முனிசிபாலிட்டிகளில் மின்சாரம் தடைபட்டது மற்றும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையால் வெளியிடப்பட்ட வான்வழிப் புகைப்படங்கள், மேற்கு விசாயாஸ் பகுதியில் உள்ள நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன. கனமழைக்குப் பிறகு சாலைகள் மற்றும் வயல்களில் ஒவ்வொரு திசையிலும் பல மைல்களுக்கு வெள்ளம் காணப்படுகிறது.
பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது.
சுமார் 332,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான செபு உட்பட பல அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை புயல் தாக்கியது.
நாட்டின் மூன்று பெரிய தீவுக் குழுக்களில் இரண்டு- 45 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வைசயாஸ் மற்றும் மிண்டானாவோவில் தொலைத்தொடர்பு செயலிழந்ததுள்ளது.
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய 15வது புயல் ராய் ஆகும். இது தீவிரம் குறைந்து, இப்போது ஒரு புயலாக உள்ளது, அதிகபட்சமாக மணிக்கு 165 கிலோமீட்டர் (103 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது, இது வகை 2 புயலுக்கு சமம்.
இந்த புயல் தற்போது வியட்நாம் கடற்பகுதியில் தென் சீனக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் சீனாவின் ஹைனான் நகரை நெருங்கி வருவதால் மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.