28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

சுமந்திரன், கஜேந்திரகுமார் விளங்காமல் கதைக்கிறார்களா?; அல்லது மக்களை குழப்ப கதைக்கிறார்களா?: விக்னேஸ்வரன் சந்தேகம்!

மாகாணசபை தேர்தல்கள் நடக்காது இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சிங்கள மயமாகிவிடும். அதன்பின் நாங்கள் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற இந்தப் 13வது திருத்தச் சட்டமே. அது நிரந்தர தீர்வல்ல என தெரிந்தும், உடனடியாக அதை நடைமுறைப்படுத்த கோருவதன் பின்னணி இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதிலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு-

கேள்வி :- தமிழ்க் கட்சிகள் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டமை வியப்பை அளிக்கின்றது. திரு.சுமந்திரன், திரு.கஜேந்திரகுமார் ஆகியோர் 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என்றும் நீங்கள் 13வது திருத்தச் சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். உங்கள் பதில் என்ன?

பதில் :- பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு என்றுமே தீர்வாகாது என்பதை நான் முற்றிலும் ஏற்கின்றேன். அதுவே தீர்வு என்று நான் எந்தக் காலத்திலும் கூறவில்லை. கூறவும் மாட்டேன். 13வது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சியின் கீழ் அமைந்திருக்கும் அதிகாரப் பரவலாக்கல் (Decentralization); நாங்கள் எங்கள் தீர்வாக சமஷ்டி அடிப்படையில் கேட்பது அதிகாரப் பகிர்வு (Devolution).

எமது கட்சியின் நிலைப்பாடு கூட்டு சமஷ்டி அரசாங்கம் ஆகும். ஆகவே சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக இறுதி தீர்வினை எமது மக்கள் தெரிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகும். இதனையே, கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூறியிருந்தோம்.

இந்த இளம் அரசியல்வாதிகள் இருவருமே எம் தமிழ் மக்களின் அறிவுசார் பாராளுமன்றப் பிரதிநிதிகள். நான் கூறுவனவற்றை அவர்கள் புரியாது பேசுகின்றார்களா அல்லது புரிந்தும் அரசியல் காரணங்களுக்காக என் மேல் மக்களிடையே வெறுப்பேற்ற முனைகின்றார்களா என்று எனக்குத் தெரியாது. இருக்கும் சட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் கேட்கின்றோம். தமிழ் மக்களின் அரசியல்த் தீர்வாக அதிகாரப் பகிர்வைக் கேட்கின்றோம்.

13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியாகவும் ஏற்கமுடியாது. அதிகாரப் பரவலாக்கமும் அதிகாரப் பகிர்வும் இரு சமாந்திரக் கோடுகள். ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பரவலாக்கம் ஒரு திசை என்றால் அதற்கு சமாந்திரமாகவே மறு திசையில் அதிகாரப் பகிர்வு செல்கின்றது. சமாந்திரக் கோடுகள் ஒன்று சேரா. ஆகவே ஒன்று மற்றையதின் ஆரம்பப் புள்ளியல்ல.

எமது கூட்டுக் கட்சிகள் 13வது திருத்தச் சட்டம் எமது அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வாகும் என்று எங்குமே கூறவில்லை. கூறமுடியாது. மாறாகச் சமஷ்;டி அரசியல் யாப்பொன்றே எமக்கு நிரந்தரத் தீர்வளிக்கும் என்று தான் கூறிவருகின்றார்கள். எங்கள் கட்சி, அதாவது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, கூட்டு சமஷ்டி முறையே நிரந்தர தீர்வைத் தரும் என்று கூறுகின்றது.

பின் ஏன் 13வது திருத்தச் சட்டத்தைத் தூக்கிப் பிடிக்கின்றீர்கள் என்பதே உங்கள் கேள்வி.
13வது திருத்தச் சட்டம் தற்போதைய அரசியல் யாப்பின் ஒரு அங்கம். ஆனால் 1987ல் அத்திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கியிருந்த பல அதிகாரங்கள் இன்று மத்திய அரசாங்கத்தால் அன்றைய 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டத்தால் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ் வந்த மாவட்ட செயலர், கிராம சேவகர் போன்றோர் மத்தியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதனால் மாகாணங்களில் இரு வேறு நிர்வாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஒன்று மத்தியின் நிர்வாகம், மற்றையது மாகாண நிர்வாகம்.

போதாக்குறைக்கு ஆளுநர்களும் தமது அதிகார அலகைப் பலப்படுத்தி வருகின்றார்கள். இதன் காரணத்தினால் எம்மைப் பொறுத்த வரையில் வடக்கு மாகாணசபையின் சொற்ப அதிகாரங்களைக் கொண்டு ஓரளவுக்கு கட்டுப்படுத்தக் கூடிய காணி அபகரிப்பு, எமது வளங்களின் சூறையாடல், எமது உள்ளூர் மீனவ மக்களின் பிரச்சனைகள், இராணுவத்தினால் ஏற்படும் தலையீடுகள் – சிக்கல்கள் போன்றவை, பௌத்த மதமாற்றங்கள், பௌத்தர் இல்லாத இடங்களில் பௌத்த மதத் தலங்களைக் கட்டல் மற்றும் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கல் போன்ற பலதையும் நாம் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாகாணசபை தேர்தல்கள் நடக்காது இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சிங்கள மயமாகிவிடும். அதன்பின் நாங்கள் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும்.

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்த்தான் மலையக மற்றும் முஸ்லீம் மக்கட் தலைவர்களும் எம்முடன் சேர்ந்து இந்தக் காரியத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற இந்தப் 13வது திருத்தச் சட்டமே. அதை நீக்கினால் மத்திய அரசாங்கம் துணிந்து வடகிழக்கை ஆக்கிரமித்துவிடும். இதை இவ்வாறு கூறியதை ஒருவர் பிழையாகப் புரிந்து கொண்டு இந்தியாவிற்கு இருக்கும் ஒரே பிடிமானம் 13வது திருத்தச் சட்டமே என்று நான் கூறியதாக என்னை விமர்சித்துள்ளார்.

அரசியல் ரீதியான ஒரு தக்க தீர்வைப் பெறும் வரையில் தற்போதிருக்கும் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி நாங்கள் கோர வேண்டும். இதுகாறும் பலர் கேட்டும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மத்திய அரசாங்கம் முன்வரவில்லை. எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கு இந்தியாவிற்கே உரிமை உண்டு. நாங்கள் அதில் கையெழுத்திடவில்லை. சிறுபான்மையர் சார்பில் இந்தியாவே கைச்சாத்திட்டது. ஆகவே அவர்களின் அந்த உரித்தை அவர்கள் பாவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆனால் இந்தியா இலங்கை விடயங்களில் உள்நுழைய 13வது திருத்தச்சட்டம் தவிர்ந்த பல உடன்பாடுகளும் சர்வதேசச் சட்டக் கொள்கைகளும் இருக்கின்றன. ஆகவே இந்தியாவிற்கு இருக்கும் ஒரே பிடிமானம் 13வது திருத்தச் சட்டமே என்று நான் கூறவில்லை. எமக்கிருக்கும் ஒரேயொரு பிடிமானம் 13வது திருத்தச்சட்டமே என்று தான் நான் கூறினேன்.

1948ம் ஆண்டின் அரசியல் யாப்பின் படி எமக்கிருந்த ஒரேயொரு பிடிமானம் உறுப்புரை 29(2)ஆக இருந்தது. அதை மீறியே “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அப்போதைய மாவட்ட நீதிபதி டி. க்ரெட்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார். அன்று அரசாங்கம் சட்டத்தை மீறி நடந்து கொண்டது போலவே இன்று மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது 13வது திருத்தச்சட்டத்தைப் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே 13வது திருத்தச் சட்ட அமுலாக்கம் இன்றைய அவலநிலையில் மாற்றம் ஏற்படுத்தத் தேவையாக உள்ளது.

நாம் 13வது திருத்தச் சட்டத்தை எமது பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டோம். ஏற்கனவே சட்டப் புத்தகத்தில் இருக்கும் சில சரத்துக்களை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று அரசாங்கத்திடம் கேட்பதே எமது குறிக்கோள். இன்று வரை சிங்களவர்களும் தமிழர்களும் இது பற்றிக் கேட்டும் பயன் கிடைக்கவில்லை. ஆகவே சட்டப் புத்தகத்தில் இருக்கும் எமது உரிமைகளை எமக்குத் தாருங்கள் என்று தகுந்தவர் மூலம் கேட்பது சமஷ்டியையோ கூட்டு சமஷ்டியையோ நாம் கைவிட்டதாகப் பொருள்படாது. ஒற்றையாட்சியின் கீழ் எமது அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது. ஆனால் சில முக்கிய நடைமுறைப் பிரச்சனைகளை பதின்மூன்றாம் திருத்தச்சட்ட அமுலாக்கத்தின் ஊடாக நாம் கையாளலாம்.

மக்களின் தற்போதைய அவல நிலையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கு இந்தியாவின் உள்ளீடு எமக்குத் தேவையாக உள்ளது. சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியல் யாப்பைப் பெற சர்வதேச ரீதியாக நாம் போராட வேண்டும். வட கிழக்கு மக்களின் அபிலாசைகளை நாம் மக்கள் தீர்மானம் ஒன்றின் மூலம் பெற நாம் போராட வேண்டும். அப் போராட்டத்தில் எமது புலம் பெயர்ந்த உறவுகளும் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் இங்கிருக்கும் சிறுபான்மையர் அனைவரும் சேர்ந்தே நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

Leave a Comment