பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு முழு படத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார் நடிகை இனியா.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் யாவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ஹலிதா சமீம் இயக்கிய புத்தம் புது காலை, ஏலே படங்களில் முற்றிலும் வேறுபட்ட சமுத்திரக்கனியாக தோன்றி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார்.
ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சமுத்திரக்கனி. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், தயாரிக்கவும் செய்து வருகிறார் ரஞ்சித். ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார் பா. ரஞ்சித்.
நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் ‘ரைட்டர்’ படத்தில் இனியா கதாநாயகியாக நடித்துள்ளார். பிராங்க்ளின் ஜோசப் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ரைட்டர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகை இனியா, ‘ரைட்டர்’ படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன்.
‘ரைட்டர்’ படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. ஏதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முழு படத்தில் நடிக்க ஆசை. இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகை இனியா.