உள்ளூராட்சிசபை தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
அந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியது.
உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம், உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலத்தை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடத்தினால் பிற்போடப்படும் எனத் தெரிவித்தார்.