சர்ச்சைக்குரிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தின் பிரகாரம், New Fortress நிறுவனத்திற்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படும் பட்சத்தில், இலங்கை மீது சர்வதேச தடைகளை விதிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்த 11 கட்சிகளின் பங்குபற்றுதலுடன் எஹலியகொடவில் இன்று இடம்பெற்ற மக்கள் சபைக் கூட்டத்தின் போதே அமைச்சர் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு, ‘யுகதனவி ஒப்பந்தம், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாழ்க்கைச் செலவு’ எனப் பெயரிடப்பட்டது.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் வீரவன்ச, இந்த ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேலும் விவாதிக்கப்படும் என்றார்.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தமது அவதானிப்புகள் மூலம் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அபாயத்தை அவர்கள் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டதன் பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இந்தப் பிரச்சினையை பயன்படுத்தக் கூடாது, மாறாக சாதகமான தீர்வொன்றைப் பெற வேண்டும் என அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.