சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்தினை சுகாதார தரப்பினர் தற்காலிகமாக மூடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றே இவ்வாறு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கரைச்சி பிரதேச சபையினரும், சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து விசேட சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த உணவகத்தில் காணப்பட்ட சுகாதார சீர்கேடு தொடர்பில் குறித்த தரப்பினால் கிளிநொச்சி சுகாதார பரிசோதகர்களிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூட பணித்துள்ளனர். இதேவேளை உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.