தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர்.
இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது.
இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம்.
புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக்கிறது.
அந்த ஊடக நிறுவனத்தினால் நடத்தப்படும் முகவரியற்ற இணையமொன்றிற்கு செய்திகளை, ஏனைய ஊடகங்களிலிருந்து பிரதி செய்து பதிவேற்றும் ஒருவரின் முகத்தை காண்பித்து இந்த முயற்சி நடக்கிறது.
தமிழ் பக்கத்தின் செய்திகளை தொடர்ந்து பிரதிசெய்து வெளியிடுவதாக, ஒரு இணையத்தை முன்பு குறிப்பிட்டு வந்தோம். செய்திகளை பிரதி செய்து, அந்த இணையத்திற்கு பதிவேற்றும் ஒருவரின் ஒழுங்கமைப்பில் அணமைக்காலமாக நடந்த சில சூம் கலந்துரையாடல்களின் பின்னர், இந்திய பயணம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக அரசறிவியல் பேராசிரியர் ஒருவர், வேலன் சுவாமிகள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சில கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் இந்திய பயண திட்டமெல்லாம் உறுதி செய்யப்பட்டு, இந்தியா வர விரும்பும் கட்சிகளின் பெயர் விபரங்கள் பெறப்பட்டுள்ளது. அவர்களிற்கு சுவிற்சர்லாந்தியிருந்து விமான பயணச்சீட்டு வழங்கப்படும்.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் ரெலோவும் அழைக்கப்பட்டிருந்த போதும், இந்திய பயணத்திற்காக தமது தரப்பிலிருந்து கலந்து கொள்பவர்களின் பெயர் விபரத்தை வழங்கவில்லை. ரெலோவின் ஏற்பாட்டில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து இந்திய பயணம் மேற்கொள்ளும் திட்டம் வகுக்கப்படுவதால் இந்த முயற்சியில் ஆர்வம் காட்டவில்லை.
இதேவேளை, வேலன் சுவாமி தலைமையில் முன்னெடுக்கும் முயற்சியை அனேக அரசியல் கட்சிகள் உள்ளூர இரசிக்கவில்லை. அரசியல் அனுபவமற்ற, போராட்ட செயற்பாட்டு பாரம்பரியமுமற்ற வேலன் சுவாமிகளின் தலைமையில் இந்த பயணத்தில் இணைய அனேக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டாது என தெரிகிறது.