நாட்டில் 30 வீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாயின் போது பயன்படுத்தப்படும் சானிட்டரி நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும் அத்தியாவசிய ஒன்றாக இருக்கின்ற சானிட்டரி நப்கின்ஸ்களுக்கு 15 வீதமான வரியினை நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் அதிகரித்துள்ளமையினால் பெண்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பல தொற்று நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது
திருகோணமலை ஊடக இல்லத்தின் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆவணப்படுத்தும் உத்தியோகத்தர் கே. சிவஜோதி இதனை தெரிவித்தார்.
இன்று (08) சர்வதேச மாதவிடாய் தினத்தையொட்டி “மாண்புடன் கூடிய மாதவிடாய்” எனும் தொனிப்பொருளில் விழுது மேம்பாட்டு ஆற்றல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் சானிட்டரி நப்கின்ஸ்களின் விலைகள் அதிகரிப்பினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாயை பிற்போடும் மாத்திரைகளை பயன்படுத்துவதினால் குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ் மாதவிடாய் காலங்களில் பெண்கள் கருவறையிலிருந்து கல்லறை வரை பாராபட்சம் காட்டப்படுகின்றனர் எனவும் மாதவிடாய் காலங்களில் ஒரு பெண் மரணிப்பாளேயானால் அந்த உடலுக்கு செய்கின்ற இறுதி சடங்கு கூட சரியாக செய்யப்படுவதில்லை மாதவிடாய் என்பது உடலில் ஏற்றப்படுகின்ற ஒரு மாற்றமே தவிர அது ஒரு தீட்டாக கருதுவது பெண்களை சமூக மட்டத்தில் ஓரம்கட்டி பார்ப்பது போன்றது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது
அத்துடன் பாடசாலைகளில் சமத்துவ ரீதியான பாலின கல்வி கற்றலை மேம்படுத்த வேண்டும் என்பதுடன் அரசாங்கமானது தற்போது பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் நப்கின்ஸ்க்கு 15 வீத வரிகளை விதித்துள்ளது அந்த வரியானது எதிர்வரும் நாட்களில் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது