முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 37ஆம் ஆண்டு நினைவு தினம்இன்று (02) படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற எல்லை கிராமத்தில் இலங்கை இராணுவ உடைதரித்தோரால் 1984 டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதவிய இராணுவ முகாமில் இருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 32 ஆண்கள் இதேநாள் ஒன்றில் சுட்டு படுகொலை கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வு குறித்த கிராமத்தில் நடைபெற்றுவருகின்றது .
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.