கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஒன்றை இன்று (30) மேற்கொண்டுள்ளனர்.
.பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிதான மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் கடந்த காலத்தில்
பெரியபரந்தன் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு
வருகின்றனர். உரிய உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் ஆட்சேபனைகளை
அனுப்பியதோடு பல தடவைகள் பொது மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக
பெரியபரந்தன் மக்கள் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக்
கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக்
கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாக பலமுறை மகஜரில்
சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
எனத் தெரிவிக்கும் பொது மக்கள்
பெரிய பரந்தன் கிராமத்தில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்றும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னைவள
தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த
உணர்வுகளையும் கருத்தில் கொண்டு புதிய மதுபான சாலை அமைப்பதனை தடுத்து
நிறுத்துமாறும் பொது மக்கள் கோரியுள்ளனர்.