மாவீரார்னால் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு கடற்கரையில் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக சென்ற போது, வீதியில் வழிமறிக்கப்படடு பீற்றர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏற்கனவே இருந்த பிடியாணை ஒன்றின் அடிப்படையில் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், அவரது மனைவி வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டதுடன், என்ன தடை வந்தாலும் நினைவேந்தல் மேற்கொள்வேன் என கூறினார். அவருக்கு ஆதரவாக பெருமளவான மக்கள் அங்கு குவிந்தனர்.
இதையடுத்து, பீற்றர் இளஞ்செழியனை பிணையில் விடுவிக்கதாகவும், அந்த இடத்திலிருந்து எழுந்து செல்லுமாறு பொலிசார், மனைவியிடம் குறிப்பிட்டனர்.
எனினும், அதற்கு உடன்படாத பீற்றர் இளஞ்செழியனின் மனைவியும், பொதுமக்களும் முல்லைத்தீவு கடற்கரையில் நினைவேந்தலை மேற்கொண்டனர்.
இராணுவம் மோட்டார் சைக்கிள் அணி மக்களை அச்சுறுத்தும் வகையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். எனினும், மக்கள் அச்சுறுத்தல்களிற்கு அடிபணியாமல் நினைவஞ்சலியை மேற்கொண்டனர்.
அஞ்சலி முடிந்த பின்னர் பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் ,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் , மற்றும் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.