ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில் துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு பெரும் விருட்சமாக வளர வேண்டுமானால் இரசிகர்களின் ஆதரவு எனும் உரமும் இலாபம் எனும் நீரும் அவசியம் என வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.
சிப்ஸ் சினிமாஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்திற்கூடாக ‘கலிகாலன்’ எனும் சிறிய திரைப்படத்தினை தயாரித்துள்ள அவர் 2021 – கார்த்திகை மாதம் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கும் இத்திரைப்படம் தொடர்பில் கல்முனை ஊடக மையத்தில் இன்று இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்-
ஈழத்துக் கலைஞர்களின் பாரிய முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘கலிகாலன்’ போன்ற திரைப்படங்களை நாம் ஆர்வத்துடன் சென்று பார்வையிடுவதுடன், எமது கலைஞர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் எமது கலைஞர்களின் திறமைகளை நாம் பாராட்டுவதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக சினிமா பாரிய வளர்ச்சி காணும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அத்தோடு எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகவுள்ள ‘கலிகாலன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்வையிடுவதுடன் ரசிகர்கள் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் மேலும் பல சினிமாக்கள் கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கும் மட்டக்களப்பு சினிமா வர்த்தக ரீதியில் வளர்ச்சி காண்பதற்கும் சினிமா துறை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவினையும் மட்டக்களப்பில் இருந்து சினிமாத்துறைக்காக பாரிய பங்காற்றிவரும் கலைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றேன்.
ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில் துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு பெரும் விருட்சமாக வளர வேண்டுமானால் இரசிகர்களின் ஆதரவு எனும் உரமும் இலாபம் எனும் நீரும் அவசியம். தாம் செலவழிக்கும் பணம் திரும்பி வரும் எனும் நம்பிக்கை மிகவும் தூர்ந்து போயிருக்கும் நிலையிலும் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாக எம்மை போன்று குறுந்திரைப்படங்களை தயாரிக்கின்றனர்.
அந்தவகையில் ‘சிப்ஸ் சினிமாஸ்’ எனும் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கூடாக ‘கலிகாலன்’ எனும் சிறிய திரைப்படத்தினை 2021 – கார்த்திகை மாதம் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட இருக்கின்றோம். இத்திரைப்படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.தற்போது மட்டக்களப்பில் சினிமா வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதற்கான காலம் கனிகின்றது என்றே கூறலாம். மேலும் இதுவரை மட்டக்களப்பு திரையரங்குகளில் மாத்திரம் திரையிடப்பட்டு வந்த இவ்வகையான சிறிய திரைப்படங்கள்இ ‘கலிகாலன்’ திரைப்படத்தின் மூலமாக அம்பாறை மாவட்டத்திற்கும் நகர்ந்திருப்பது இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியின் மற்றுமொரு சான்றாகும்.
எனது தயாரிப்பில் வெளியாகின்ற கலிகாலன் குறுந்திரைப்படமானது மட்டக்களப்பின் பிரபலமான இயக்குநராக அடையாளம் காணப்பட்டுள்ள கு. கோடீஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளர். இக்குறுந்திரைப்படமானது திரையரங்கு இரசிகர்களைக் கவரும் விதமான ஜனரஞ்சக சினிமா பாணியில் சிறந்த கதை, திரைக்கதைகளைக் கொண்டு படங்களை இயக்கி இருக்கின்றார். சிறிய திரைப்படங்களாக இருந்தாலும் அவை தொடர்ச்சியாக வெளியிடப்படும் போது ஏனைய தொழிநுட்பக் கருவிகளின் தரமும் கலைஞர்களின் திறனும் தானாக மேம்படும் எனும் நம்பிக்கையை அவர் கொண்டுள்ளதை இக்குறுந்திரைப்படத்தில் நாம் காணலாம்.
எமது இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம். நல்ல முயற்சிகளுக்கு எப்பொழுதும் மக்களின் ஆதரவு இருக்கும் என்பதற்கு சான்றாக அவர்களது திரைப்படங்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பங்களில் திரையரங்கில் முண்டியடித்த சனக்கூட்டமே சான்றாகும்.முழு நீளத் திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக அமைந்திருந்தாலும் குறுகிய நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இந்த சிறிய திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பு செலவு குறைக்கப்படுவதுடன்இ குறுகிய காலத்திற்குள் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு இரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.
தற்போது வர்த்தக சினிமாவை வளர்க்க புதியதொரு கோணத்தில் புதியதொரு யுக்தியாக மட்டக்களப்பில் முழுநீளத் திரைப்படங்களுக்கு பதிலாக அதன் குறுகிய வடிவமாக சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சிறிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருவதுடன் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றுவருகின்றது.
அந்தவகையில் வர்த்தரீதியிலான சினிமாக்களை தயாரிப்பதற்கு எமக்கு முன் உள்ள பிரதான சவால்களாக நவீன தொழில் நுட்பங்களைப் பெற்றக்கொள்வதும் அதனைக் கையாள்வதற்கான அனுபவமிக்க கலைஞர்களை உருவாக்குவதும்இ முழு நீளத் திரப்படங்களை உருவாக்க எடுக்கும் நீண்ட காலம் பெரும் பொருட்செலவு என நீண்ட பட்டியல் காணப்படுகிறது. இவை தவிர இந்தியத் திரைப்படங்களின் பெரும் ஆளுமைக்கு மத்தியில் எமது ஈழத்து திரைப்படங்களை நோக்கியும் இரசிகர்களைத் திருப்புவதும் பெரும் போராட்டமாகவே அமையும். இவற்றிற்கு மத்தியில் எமது திரைப்படங்களை வர்த்தகரீதியில் வளர்க்கவே முடியாதா எனும் கேள்விக்கு ‘முடியும்’ எனும் திடமான நம்பிக்கையில் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
எனவே எமது சினிமா வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராமல் போனதற்கு இங்கு இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலைகளே பிரதான காரணம் என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருந்தாலும் அது மட்டுமே காரணம் என்று கூறிவிட்டு நாம் ஒதுங்கிக் கொள்ள முடியாது. இன்றைய சூழலில் எம்மத்தியில் இருக்கும் பல்வேறு சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கான மாற்று யுத்திகளை வகுத்து அதனூடாக எமது சினிமாவை வளர்ப்பதே பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன் என்றார்.
-பா.டிலான்-