கிண்ணியாவில் நடந்த கொந்தளிப்பான நிலைமையை வீடியோ படம் பிடித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். பல செய்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டன.
கிண்ணியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களே இந்த அடாவடியில் ஈடுபட்டனர்.
கிண்ணியாவில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, கிண்ணியாவில் கொந்தளிப்பான நிலைமை உருவாகியது.
ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிண்ணியாவில் டயர்களை கொளுத்தினர். வைத்தியசாலை, பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை உடைத்து சேதமாக்கினார்கள்.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆத்திரமிகுதியில் நகரில் கோசமெழுப்பியபடி பேரணியாக சென்றனர். இதன்போது, வீடியோ படம் எடுத்தவர்கள் விரட்டிப் பிடித்து தாக்கப்பட்டனர். இதில் பல செய்தியாளர்களும் அகப்பட்டனர்.
செய்தியாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னரும் பலரை சூழ்ந்து கொண்டு, கொடூரமாக தாக்கினார்கள். கையடக்க தொலைபேசிகள், கமராக்கள் பறிக்கப்பட்டு, அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டன. சிலரது கையடக்க தொலைபேசிகள் அந்த கும்பலால் திருடப்பட்டுள்ளது.
கும்பலின் கொலைவெறி தாக்குதலையடுத்து, பல செய்தியாளர்கள் அங்கிருந்து தப்பியோடி, தம்மை பாதுகாத்தனர்.
திருகோணமலையை சேர்ந்த செய்தியாளர அப்துல்சலாம் யாசீமையும் குழுவொன்று சூழ்ந்து தாக்கியது. அவர் ஊடகமொன்றிற்கு நேரலை ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது, தாக்கப்பட்டு, இரண்டு கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டன. அவற்றிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்ட பின்னர், ஒரு கையடக்க தொலைபேசி திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஒன்றை கும்பல் கொண்டு சென்று விட்டது.
தாக்கப்பட்டது, கையடக்க தொலைபேசி திருடப்பட்டது தொடர்பில் அப்துல் சலாம் யாசீம், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதுதவிர, அந்த பகுதிகளை சேர்ந்த மேலும் சில செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசசபை தவிசாளரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.