தனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் விடயம் தெரிய வந்ததும்,பேஸ்புக் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்தரமடைந்த இளம்பெண்ணொருவர் நடத்திய அசிட் தாக்குதலில், பேஸ்புக் காதலன் பார்வையை இழந்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார் (27). இவருக்கு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியைச் சேர்ந்த ஷீபா (37) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஹாய், ஹலோ என ஆரம்பித்த பேஸ்புக் உரையாடல் நாளடைவில் மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளது. இருவரும் பேஸ்புக்கில் காதல்கோட்டை கட்டியுள்ளனர்.
பரஸ்பரம் திருமணம் செய்துக்கொள்வது என்ற உத்தரவாதத்துடன், காதல் பறவைகளாக சிறகடித்துள்ளனர்.
ஷீபாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள தகவல் தெரிந்ததையடுத்து, அருண் காதல் கோட்டையிலிருந்து வெளியேறினார்.
எனினும், ஷீபா விட்டபாடில்லை. தன்னை திருமணம் செய்து கொள்ளக்கோரி அருண்குமாரை வற்புறுத்தி வந்தார். எனினும், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.
தன்னிடம் கடனாக வாங்கிய ரூ.2 லட்சத்தை திருப்பி தருமாறு ஷீபா கேட்டுள்ளார். தராவிட்டால், பொலிசில் முறையிடுவேன், உன் திருமணம் குழம்பிவிடும் என மிரட்டியுள்ளார். இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அடிமல்லிக்கு வருமாறு அருணிடம் கூறினார்.
இதனையடுத்து அருண் குமார் தனது நண்பருடன் அங்கு வந்துள்ளார். இரும்புல்லா பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த ஷீபா தான் மறைத்து வைத்திருந்த அசிட்டை எடுத்து அருண் குமார் மீது வீசியுள்ளார்.
அசிட் வீச்சால் அருண் குமாரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அவரது நண்பர் அடிமல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அடுத்தநாள் அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அருண்குமாருக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அசிட் சிதறல்கள் பட்டு, ஷீபாவின் கழுத்து, முகத்திலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பொலிசார் ஷீபாவை அவரது கணவர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.