26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
ஆன்மிகம்

குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள்!

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் திகதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

முதல் நான்கு ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதை “”ஏகாதச பிரகஸ்பதி” என்று கூறுகிறோம்.

இந்த காலகட்டத்தில் செய்தொழிலில் ஏற்றமும் பொருளாதாரத்தில் உயர்வும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உற்சாகமான மனநிலையுடன் வலம் வருவீர்கள். குடும்பத்தில் குழந்தை பிறப்பு உண்டாகும்.

என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கி நின்ற விஷயங்களில், திடீரென்று எதிர்பாராத உதவிகள் தேடி வந்து அனைத்து கஷ்டங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும். முக்கியமான விஷயங்களுக்கு பயணம் செய்ய நேரிடும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள்.

படிப்பில் மந்தமாக இருந்தவர்கள் நன்றாகப் படித்து, உயர் கல்வி பெற வாய்ப்புகள் கிடைக்கும். பங்காளிகளுடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பாராட்டுகளும், விருதுகளும் கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். வருமானம் சிறப்பாக அமைவதால் புதிய வருவாய் வரக்கூடிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். அசையும், அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து, அதனால் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். உடன்பிறந்தோர் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைச் செய்வார்கள். அவர்களுக்கும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். சாதுர்யத்துடன் பேசி அனைவரையும் கவர்வீர்கள். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமூகமான பாகப் பிரிவு உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்வீர்கள். முக்கியமான தருணங்களில் உங்கள் பழைய அனுபவம் கை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குரு பகவான் உங்களின் பலவித பிரச்னைகளுக்கு முடிவு காண வைப்பார். வழக்குகளில் வெற்றியைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் தங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பணவரவும் மிகுதியாக வரும். விரும்பிய இடமாற்றங்களும் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு விற்பனையில் வளர்ச்சியும் கொடுக்கல், வாங்கலில் லாபமும் ஏற்படும். புதுப்புது முதலீடுகளைச் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகத் தீர்ந்துவிடும்.

விவசாயிகள் இந்த குரு பெயர்ச்சியில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். மாற்றுப் பயிர்களை பயிர் செய்து பயனடைவீர்கள். நீர்ப் பாசனத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கால்நடைகளின் பராமரிப்பால் வியாபாரம் விருத்தியடையும்.

அரசியல்வாதிகளுக்கு கனவுகள் மெய்ப்படும். உங்கள் செயல்களுக்கு எந்த நாளும் இல்லாத அளவுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். உங்களின் திறமைகளை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்கள். ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். பெண்மணிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு கூடி வரும். உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைப்பேறு உண்டாகும். கணவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் அசாத்திய முன்னேற்றம் ஏற்படும். மனக்குழப்பங்கள் நீங்கும். கடவுள் பக்தியை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் வருங்கால கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

♦♦♦♦♦♦♦♦♦

ரிஷபம்
(கார்த்திகை 2-ஆம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செய்தொழிலில் மாற்றத்தைக் காண்பீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் உதயமாகும். தெளிவாக சிந்திப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். வீண் விரயங்கள் என்று எதுவும் ஏற்படாமல் காப்பாற்றப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். நெடு நாளாக வராமலிருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் திருமணம் போன்ற சுப பந்தங்கள் உண்டாகும்.

குழந்தைகளை நல்ல பழக்க வழக்கங்களுக்கு உட்படுத்துவீர்கள். உங்களின் ஆற்றல் கூடக் காண்பீர்கள். புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் கிடைத்து, அவர்களால் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும்.

செய்தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பாராட்டுகளும் தேடிவரும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் உங்களை வளப்படுத்திக் கொள்வீர்கள்.

நெடுநாளாக இழுபறியாக இருந்து கொண்டிருந்த விஷயங்களில் நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். அலைந்து திரிந்து செய்து வந்த காரியங்களை சுலபமாகவும், வெற்றிகரமாகவும் முடித்து விடுவீர்கள். தெய்வ பலம் கூடும். ஆன்மிகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உங்கள் காரியங்களைத் திட்டமிட்டு செய்து முடித்து விடுவீர்கள்.

உங்கள் முயற்சியில் பொறுப்புடன் சாதுர்யமாக நடந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட தியானம், பிராணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்வீர்கள். அதேநேரம் மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிறர் கேட்காமல் அறிவுரைகளை வழங்க வேண்டாம். கடன் கேட்பவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கவும். அதோடு எவரிடமும் வீண் விரோதமும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருபெயர்ச்சி காலகட்டத்தில் பணி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க சற்றுத் தாமதம் ஆகும். மேலதிகாரிகளின் கவனம் உங்கள் செயல்களின் மீதே இருக்கும். சிலருக்கு தற்காலிக பணிநீக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கலாம். தைரியத்துடன் உங்கள் வேலைத்திறனை பளிச்சிடச் செய்யுங்கள்.

வியாபாரிகளுக்கு சில தடைகளைத் தாண்டி பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொறுமையுடனும் நிதானத்துடனும் நிலைமைகளைச் சமாளித்து செயல்படவேண்டும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் பலத்த போட்டிகளையும்
சந்திப்பீர்கள்.

விவசாயிகள் தற்பொழுது புதிய குத்தகைகளை எடுக்காதீர்கள். விளைச்சல் அதிகமாக இருந்தாலும் லாபம் காண்பது சற்று கடினமாக இருக்கும். கரும்பு பயிர் செய்பவர்கள் கூடுதல் லாபம் அடைவார்கள். வயல் வரப்பு பிரச்னைகள் தீரும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஏற்கெனவே திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். உங்களின் சில பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் சில வெற்றிகள் கிடைக்கும். உங்களின் செயல்பாட்டால் உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள். கடுமையாக உழைக்க வேண்டிய கால
கட்டமாகும்.

பெண்மணிகள் விரக்தி, ஆர்வமின்மை போன்றவற்றை விட்டொழித்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விருந்தோம்பலில் ஈடுபட்டு சற்று மனக் கசப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தினரிடமும் கணவரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் கடுமையான முயற்சிக்குப் பிறகு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். உங்கள் பேச்சு வார்த்தைகளில் நிதானம் தேவை.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

♦♦♦♦♦♦♦♦♦

மிதுனம்
(மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை அடையும். உங்கள் செயல்கள் சாதனைகளாக மாறும். அதன் மூலம் சமுதாயத்தில் பெயர், புகழ் பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து விருதுகளும், பாராட்டுகளும், கெளரவமும் கிடைக்கும். சிறப்பான பயிற்சிகளுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகம் மகிழ்ச்சியாகவே அமையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களைக் குற்றம், குறை கூறிக் கொண்டிருந்தவர்கள் மனம் திருந்தி நட்பு பாராட்டத் தொடங்குவார்கள். தீவிர முயற்சியின் பேரில் செய்தொழிலில் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

கடந்தகாலத்தில் உங்களின் உழைப்புக்கு கிடைக்காத மதிப்பும், வசதியும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலிருந்த சஞ்சலங்கள், குழப்பங்கள் யாவும் சிறிது சிறிதாக மறைந்துவிடும். குடும்பத்தாரிடமும் ஒற்றுமை மேலோங்கும். உடன்பிறந்தோருடனும் இணக்கமாக வாழும் சூழ்நிலை உருவாகும்.

மறைமுக எதிர்ப்புகளில் இருந்து விலகி விடுவீர்கள். வருமானம் சீராக உயரத் தொடங்கும். ஆகார விஷயங்களில் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். கூடுதல் வருமானம் பெற, புதுமையான வழிகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய நண்பர்களுடன் கால நேரங்களை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். அதேநேரம் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

அடிக்கடி பயணங்கள் செய்ய வாய்ப்பு உண்டாகும். அயல்நாடு செல்ல முயற்சிப்பவர்கள் அதற்கு உண்டான வாய்ப்புகளைப் பெறுவார்கள். உடலாரோக்கியம் சிறப்பாகவே தொடரும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு தீர்த்த யாத்திரை செய்யக்கூடிய பாக்கியமும் கிடைக்கும். “பணமுடை’ என்ற பேச்சுக்கே இடம் இராது. பொருளாதார வளர்ச்சி உயர்ந்து காணப்படும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதேநேரம் யாராவது பிரச்னைகளுடன் உங்களை அணுகினால் அவர்களைப் புறக்கணித்து விடவும்; இத்தகையோரால் உங்கள் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்கள் இந்த குருபெயர்ச்சி காலகட்டத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணிச்சுமை இருந்தாலும் அவற்றைச் செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரிகள் வரவேண்டிய பண விஷயத்தில் அக்கறை காட்டி வசூலித்து விடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபம் காண்பீர்கள். உங்கள் சமயோஜித புத்தியால் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

விவசாயிகள் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பல விஷயங்களில் போராடி பலன்களைப் பெற வேண்டியிருக்கும். கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். புதிய குத்தகைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டாகும். முக்கிய தலைவர்களுடனான சந்திப்பு இந்த காலகட்டத்தில் நிகழும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் தீர்த்து வைப்பீர்கள். அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு காரியங்கள் யாவும் சுலபமாக நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சாதுர்யமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு கடமை உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தைப் பொறுப்போடு நடத்திச் செல்வார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்துவதில் இருந்து வந்த தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

மாணவமணிகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண்களை அள்ளும் காலகட்டமாக இது அமையும். விளையாட்டுகளில் வெற்றி பெற்று உற்சாகமடைவீர்கள். வருங்கால கனவுகள் நிறைவேற அறிகுறிகள் தென்படும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

♦♦♦♦♦♦♦♦♦

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்திறன் கூடினாலும் காரியங்கள் சற்று மந்தமாகவே நடக்கும். உங்கள் வேலைகளைச் சரிவர திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும்.

இக்கட்டான தருணங்களில் உங்களின் பழைய அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும். பெற்றோருடனும் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். சோம்பலை ஒதுக்கி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் காரியமாற்ற தொடங்குவீர்கள். செய்தொழிலில் புதிய நுட்பமான தகவல்களையும் அறிந்து கொள்வீர்கள். பழைய டென்ஷனில் இருந்து விடுபட்டு புதிய வாழ்க்கை முறைக்கு மாறுவீர்கள்.

வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் ஒன்று உங்களை வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதேநேரம் புதிய கடன்கள் வாங்கும் நேரத்தில் கவனமாக இருக்கவும். சொத்துக்களை அடமானம் வைக்கும் பொழுது நன்கு பரிசீலனை செய்து வைக்கவும். ஓய்வு நேரத்தை சமுதாய நலப் பணிகளுக்கு செலவிடுவீர்கள். இதனால் உங்கள் பெயர், அந்தஸ்து உயரக் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சற்று பாராமுகமாக இருந்தாலும் அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை விட வேண்டாம்.

நெடுநாளாக விற்காமல் இருந்த பழைய அசையா சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்று, அதன் மூலம் சரியான முதலீட்டைச் செய்வீர்கள். மேலும் சிலர் இருக்கும் வீட்டைப் பழுது பார்ப்பார்கள். அநாவசிய செலவுகளைத் தள்ளி வைக்கவும். மற்றபடி உங்கள் துணிவு உங்களுக்கு கைகொடுக்கும். ஆன்மிகத்தில் உயர்வடைய தக்க குருவை நாடிச் செல்வீர்கள். உங்கள் மனதைத் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வேலைகளையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகிவிடும். உன்னதமான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் அடங்கிவிடுவார்கள். வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். அனைத்து தேவைகளையும் சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கிய அதிகாரிகள் உங்களுக்கு கருணை காட்டுவார்கள்.

வியாபாரிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் லாபம் அதிகரிக்கும். பொறுமையாக செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிறிய முதலீட்டில் புதிய வியாபாரத்தை தொடங்குவீர்கள். நண்பர்களுடன் கூட்டு வியாபாரம் நல்ல பலனளிக்கும். நேர்முக, மறைமுகப் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு இந்த காலகட்டத்தில் வரவேண்டிய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பயிர்களுக்கு புழு, பூச்சிகள் பாதிப்பு ஏற்படாது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாற்றுப் பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் கோரிக்கைகளை கட்சி மேலிடம் பரிசீலனை செய்யும். உங்கள் முயற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக பலனளிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சக கலைஞர்களால் உதவிகளும் கிடைக்கும். பணவசதியும், விருது பெறும் வாய்ப்புகளும் உண்டாகும். உங்களின் திறமை பளிச்சிடும். எவரிடமும் விரோதப் போக்கு வேண்டாம்.

பெண்மணிகளின் கருத்தை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். எவரிடமும் அநாவசிய பேச்சு வார்த்தைகள் வேண்டாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் அன்பு மேலோங்கும்.

மாணவமணிகள் முயற்சிக்கு ஏற்ப கல்வியில் முன்னேறுவீர்கள். பெற்றோர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். ஆசிரியர் மற்றும் பெரியோர் சொற்படி நடக்கவும்.

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும்.

(தொடரும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

சிம்மம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மிதுனம் ராசிக்கான 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

Pagetamil

ரிஷபம் ராசிக்கான 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment