தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டது. அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சமர்த்தி உத்தியோகத்தர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 1438 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளர்களாக இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்படுகின் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் அணுகுமுறை காரணமாக சமுர்த்தி திட்டம் வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எமது அணுகுமுறையே சரியானது என்பதை நிரூபித்த விடயங்களில் ஒன்றாக சமர்த்தி திட்டம் அமைந்துள்ளது.
மக்கள் தொடர்ந்தும் கையேந்தி வாழாமல் நிரந்தரமான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் சமுர்த்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போது இருந்ததைவிட தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வாழ்வு முன்னேற்றமடைந்துள்ளதை என்னால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின் ற மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொள்ளும் வகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலாற்ற வேண்டும்.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமுர்த்தி வேலைத் திட்டங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, சமுர்த்தி உத்தியோகத்தர்களினால், இடமாற்றம் போன்ற நிர்வாகம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுவாக நிர்வாக விடயங்களில் தலையிடுவதற்கு தான் விரும்புவதில்லை என்றபோதிலும், நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு கிடைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 20.11.2021