வடமாகாணத்தில் பல பிரதேசங்களிலும் விறகு வியாபாரிகள் வீதிகளில் தென்பட ஆரம்பித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும், விழிபிதுங்கி வரும் நிலையில், வடக்கில் கணிசமாக விறகுப் பாவனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1990களிலும், 2000களின் தொடங்கங்களிற்கும் பின்னர், மீண்டும் இப்பொழுது விறகு வியாபாரத்திற்கு மவுசு கூடியுள்ளதாக விறகு வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சீமெந்து உள்ளிட்ட கட்டுமான தேவைகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கட்டிட தொழிலாளிகள் பலர் இப்போது விறகு வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும் விறகுகளை சுமந்தபடி, வீதிகளில் நடமாடும் வியாபாரிகள் நடமாட ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் பண்டிகைகளில் மட்டும் சம்பிரதாய தேவைகளிற்கு விறகை பயன்படுத்திய முக்கிய நகரவாசிகளும் இப்பொழுது விறகு பயன்பாட்டிற்கு திரும்பி வருகிறார்கள். பெரும்பாலானவர்கள், அன்றாட சமையலின் ஒரு பகுதியை விறகில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலைமை வனச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமென்பது குறிப்பிடத்தக்கது.