ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல் மீது கடந்த10 மாதங்களில் இரண்டாவது முறையாக பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு சுக்கேர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இப்போது, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் தொகுதியான கோகுவான்டாவைச் சேர்ந்த 37 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது போலீஸார் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஒரு வேலைக்காக எம்எல்ஏ பீலைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்.
வேலைவாங்கித் தருவதாகக் கூறியது மட்டுமல்லாமல், திருமணம் செய்து கொள்வதாகவும் பீல் உறுதியளித்தார் வல்லபாநகரில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்தபின் எனக்கு பீல் தொலைப்பேசி அழைப்பு செய்வதை நிறுத்திவிட்டார். இதுகுறித்து நான் கேட்டபோது என்னை மிரட்டினார் என்று அந்த பெண் புகாரில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து அம்பாமாதா போலீஸ்நிலையத்தில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக எம்எல்ஏ பீல் மறுத்துள்ளார்.